21.10.11

"குற்ற உணர்வும் நம்பிக்கையும்" - உள் தேர்தல் குறித்து

இந்த வலைப்பக்கத்தை திறக்கும் நேரத்தில் முடிவுகள் வெளிவரலாம்.  அதற்குள்ளாவது அந்த தேர்தல் பற்றி அ. பிரபாகரனின் அனுபவமும் ஆய்வும்

  • இன்று [பதினேழு] எங்கள் ஊரில் பஞ்சாயத்து தேர்தல். நான் தற்போது சென்னையில் இருக்கிறேன். இங்கு பத்தொன்பதாம் தேதிதான் தேர்தல். எனக்கு ஒட்டு எங்கள் ஊரில். ஆனால் இந்த முறை நான் ஊரில் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை. ஏறத்தாழ நானும் ஐந்தாறு தேர்தல்களைச் சந்தித்திருக்கிறேன். முதன்முறையாக நான் ஓட்டுப் போட முடியாதது பற்றி இப்போதுதான் கவலை வந்திருக்கிறது. மத்திய வயதுக்கு வந்துவிட்ட நான் இள வயதில் வாக்களித்ததில்லை. வாக்களிக்க விரும்பியதுமில்லை. சிறுவனாக இருந்த போதுஎங்கள் ஊர் தெப்பக் குளத்தில் "தேர்தல் பாதை திருடர் பாதை" என்று ஒரு இடது சாரி இயக்கத்தினர் எழுதி வைப்பார்கள். அது எனக்குப் புரிந்ததில்லை. ஆனால் இள வயதில் ஏதோஒரு விதத்தில் நான் ஓட்டுப் போடுவது தவறு என்றே கணித்திருந்தேன். பிறகு வந்த தேர்தல்களில் ஒரு சில நேரங்களில் வாக்களித்தும் சிலவற்றில் வாக்களிக்காமலும் இருந்திருக்கிறேன். சில நேரங்களில் இரண்டு மூன்று இடங்களில் முத்திரை குத்தி செல்லாததாக்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் வாக்களிப்பது என்று முடிவுக்கு வந்துவிட்டேன். 
காரணம் - நான் நேசிக்கிற கொள்கைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாததாய் என் வாழ்க்கை போன பிறகு, தேர்தலில் மட்டும் அந்த வீராப்பு எதற்கு என்ற எண்ணமாக இருக்கலாம்.  ஏறத்தாழ வாழ்க்கை முழுவதுமே சசமரசமாகி விட்டது. ஒரு தன்னிலை [subject ] சமரசங்களால்தான் கட்டமைக்கப் படுகிறது என்பதும், அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்பதும் அயர்ச்சியையும் சலிப்பையும் தருகிற விஷயங்கள். இந்த அபத்தத்திற்கு நானும் பழகிப் போய் விட்டேன். அதிலும் ஒரு சுகத்தைக் கண்டுவிட்டேன் என்பது உண்மையிலேயே வருத்தம் தரும் ஒன்றுதான். இருப்பினும் இந்த குற்ற உணர்வு ஒன்றுதான் என்னை ஒரு மனிதனாகவே கருத வைக்கிறது என்பதுதான் ஆறுதல்.
  • சரி அது போகட்டும். இந்தத் தேர்தலில் ஊருக்குச் சென்று வாக்களிக்க முடியவில்லையே என்று நான் முதன் முதலாக வருத்தப் பட்டேன். அத்வுமல்லாது நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் அற்றுப் போன சமூகச் சூழலில் ஜனநாயகமும் தேர்தலும்தான் நம்பிக்கைக்கான இறுதிப் பற்றுக்கோள்கள்  என்று நான்  இப்போது நம்புகிறேன். அதுவுமல்லாது பஞ்சாயத்து தேர்தல் ஓரளவுக்கேனும் சிறு குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. தனிப் பஞ்சாயத்துக்களாக அறிமுகப் படுத்தப்பட்ட சில இடங்களில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு இது ஓர் அங்கீகாரமாகவும் அமைகிறது. சமூக மைய நீரோட்டத்தில் அவர்கள் சுய கவுரவத்தோடு இணைவதற்கு உதவுகிறது. [இருப்பினும் அதே கிராமங்களில் ஒரு சாராரே மீண்டும் மீண்டும் பஞ்சாயத்துக்களை கைப்பற்றுவது இன்னும் நடக்கிறதே, அது ஒருவித நவீன பிரபுத்துவத்தை கட்டமைக்கிறதே என்று நீங்கள் சொல்லக் கூடும். இருந்தபோதிலும் முன்பு போல உட்கார்ந்த இடத்தில் ஜெயிப்பதெல்லாம் கேள்விக்குள்ளாகி வருகிறது.] அதேபோல சிறுசிறு உள்ளூர் தெருப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பஞ்சாயத்து முறை ஓரளவிற்காவது உதவுகிறது என்பதும் உண்மை. இதுபோன்ற சில பல காரனங்களால் நான் எப்படியும் இந்த முறை வாக்களிக்க வேண்டுமென விரும்பினேன். ஆனால் அது இயலாமல் போய்விட்டது.
கடந்த வாரம் எங்கள் ஊருக்குப் போயிருந்த பொழுது சில சுவராசியமான விஷயங்களைக் கவனித்தேன். சுமார் ஐந்தாறு பேர் வந்து கொண்டே இருந்தார்கள்.. ... எனக்கென்னவோ இந்த முறை எங்கள் நகரத்தில் பிரச்சாரம் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. கடந்த வாரம் வரை பணப் பட்டுவாடா எதுவும் செய்யப் படவில்லை. நாடாளுமன்ற  சட்ட மன்ற தேர்தல்களிலெல்லாம் எங்கள் பகுதியில் உள்ள தொண்டர்கள் பணத்தோடு ரகசியமாய் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்த முறை அப்படியல்ல. காரணம் விசாரித்தபோது நம்பர் ஒருவர் சொன்னார் - "கட்சிகளெல்லாம் தனியாக நிற்பதால் எல்லாருக்கும் பயம். ஜெயிப்போமா தோற்போமா என்று. காசை எனவே வெளியில் விட மறுக்கிறார்கள். அப்போதுதான் தேர்தல் குறித்த உண்மை எனக்கு புலப்பட்டது. இது நாம் எல்லாரும் கவலைப்பட வேண்டிய ஒன்று.
  • ஒவ்வொரு தேர்தலிலும் நாம் கவலைப் பட ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரு தேர்தல்களிலும் என்னை மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம் விஜயகாந்தின் வளர்ச்சி. பொய்யாக நிறுவப்படும் இப்படிப் பட்ட கனவுலக பிம்பங்களின் அடிப்படையில் மக்கள் ஒவ்வொரு முறையும் அணிதிரளும் போது இந்த சமூகத்தின் வளர்ச்சி பின்னோக்கித் தள்ளப்படுகிறது. அரசியல் விழிப்புணர்வுக்கான எல்லா முகாந்திரங்களையும் இந்த மனிதர்கள் அடைந்து விடுகிறார்கள். எனவே விஜயகாந்த் போன்றவர்களின் ஒவ்வொரு மேலேழும்புதல்களும் என்னை விசனத்துக்குள்ளாக்கிறது.  இந்தத் தேர்தலில் அப்படிப் பட்ட வருத்தம் இந்த சிறு கட்சிகளைப் பார்க்கும் போது தோன்றியது. 
இந்தத் தேர்தலில் எல்லா சிறு கட்சிகளும் பெரும் கட்சிகளால் கழட்டி விடப்பட்டன. இது குறித்து நடுத்தர வர்க்க மனோபாவம் மிகவும் சந்தோஷப் படுகிறது. ஆனால் இது உண்மையிலேயே வருத்தப் பட வேண்டிய ஒன்று. இப்படிக் கட்சிகள் தனியாக நிற்கும் போது ஒருவிதத்தில் அவற்றின் பலம் தனியாகத் தெரியும் என்பது உண்மையாக இருந்தாலும் இது சிருபானமியினரின் பிரதிநிதித்துவத்தை முற்றிலுமாக அழித்து விடும் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. சாதாரணமாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளோடு சேரும் போது அவை தங்களது தனித்துவத்தை இழந்து விடுவது போல தோன்றினாலும், தேர்தலுக்குப் பிறகு சிறு கட்சிகளுக்கு தங்கள் கருத்தியல்களை எடுத்துரைக்கவும், தங்கள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. நான் த.மு.மு.க- வை மனதில் வைத்துச் சொல்லுகிறேன்.  இது போன்ற சிறு கட்சிகளுக்கு தமிழகத்தில் ஒரு கணிசமான வாக்கு வங்கி இருந்தாலும் அவை ஒவ்வொரு பகுதியிலும் தனித்து நிற்கின்ற போது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும். உதாரணம். ஒரு சிறிய கட்சிக்கு ஒவ்வொரு யூனியனிலும் ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் இருந்தாலும் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தமிழகம் முழுவதும் நான்கு சதவித வாக்குகள் உள்ள ஒரு கட்சி ஒரு மாநகராட்சியையோ, நகராட்சியையோ  கைப்பற்றாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  • எனவே இந்தத் தேர்தலில் பெரும் கட்சிகளால் சிறு கட்சிகளுக்கு மறுக்கப் பட்ட அங்கிகாரம் சிறுபான்மையினருக்கு மறுக்கப் பட்ட அங்கீகாரமாகவும் உணமையான மனித உரிமை பிரச்சனைகளுக்கும் விடுதலைக் கருத்தியல்களுக்கும் மூடு விழா நடத்தும் முயற்சியாகப் பார்க்க வேண்டும். இப்போது நான் கம்யூனிஸ்டுகள், சீமான், வைகோ போன்றவர்களை மனதில் இருத்திப் பேசுகிறேன். இந்த சிறிய கட்சிகள்தான் ஓரளவேனும் கொள்கையோடு இருக்கின்றன. பெரும் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளன - அல்லது அவற்றிற்கான கொள்கைகளை அதிகாரத்தை வைக்க அவை பல நேரங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கின்றன. எனவே, இந்தப் பஞ்சாயத்து தேர்தலைப் பொறுத்தவரையில் சிறு கட்சிகள் அனுதாபத்தோடும் கரிசனையோடும் பார்க்கப் பட வேண்டும்.  

சிறு கட்சிக்குப் போக வேண்டிய ஒரு வாக்கு வீணாகி விட்டதே என்ற குற்ற உணர்வு இப்போதும் எனக்கு ஓர் மூலையில் இருக்கிறது.

கட்டுரையாளர் - அ. பிரபாகரன்


இனி நான் - 
அ. பிரபாகரனுக்கு எனது சில கோணல் கேள்விகள்.
இந்த முறையாவது உங்களுக்கு ஓட்டுப் போடமுடியாதது பற்றி வருத்தம் வந்தது மிக்க மகிழ்ச்சி - அதோடு தேர்தல்தான் ஒரே நம்பிக்கை என்று முடிவுக்கு வந்தது குறித்தும் மகிழ்ச்சியே அடுத்த முறை தேர்தலுக்கு முன்பே இதுபற்றி சிந்தியுங்கள். 
  • ////இரண்டு மூன்று இடங்களில் முத்திரை குத்தி செல்லாததாக்கியிருக்கிறேன்.///  பலமுறை வாக்களிக்க செல்லாமல் இருந்திருக்கிறீர்கள்  சிலமுறை சென்று செல்லாததாக்கி இருக்கிறீர்கள் - பயங்கரமான ஆளா இருப்பிங்க போல இருக்கே.
  • கொள்கையுடைய சிறு கட்சிகள் என்று கம்யூனிஸ்டுகளைச் சொல்லி இருக்கிறீர்களே எந்தக் கம்யூனிஸ்டு என்று சொல்ல வில்லையே?
  • வைகோ கட்சி சிறு கட்சியா??!!
  • எல்லாரையும் சொன்னிங்க பா. ம. க வை விட்டு விட்டிர்களே - அது பெரிய கட்சி என்றா??!!
  • ///"குற்ற உணர்வு இப்போதும் எனக்கு ஓர் மூலையில் இருக்கிறது."///  தயவு செய்து உங்கள் மூளையிலும் வைத்துக் கொள்ளுங்கள் - அடுத்த முறை தவறாமல் வாக்களிக்கலாம்.
அப்பு


8 comments:

Unknown சொன்னது…[பதிலளி]

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

Unknown சொன்னது…[பதிலளி]

மாமா, வந்ததற்கு நன்றி.

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

நல்லா தான்யா கேட்கிறீங்க...

Unknown சொன்னது…[பதிலளி]

ஜீவா, கேட்குறதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ... அப்படின்னு வேற எதோ சொல்ல வர்ற மாதிரி தெரியுது...

N.H. Narasimma Prasad சொன்னது…[பதிலளி]

நேர்மையான பதிவு. ஓட்டு போட முடியாததை 'குற்றஉணர்வு' என்று நீங்கள் ஒத்துக் கொள்வதை நான் பாராட்டுகிறேன். பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

இருந்தாலும் உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்குங்க...!!!

Unknown சொன்னது…[பதிலளி]

பிரசாத், வரவுக்கு நன்றி -

Unknown சொன்னது…[பதிலளி]

மனோ - வருக
நாடோடிகள் - இன்னும் நினைவில் இருக்கிறது போல...
நன்றி

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்