10.8.12

அன்னா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்



அன்னா பற்றிய தொடர் செய்திகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. மேலெழுந்த வாரியாக படிக்கிற செய்திகள் நம்மையும் உள்ளே இழுக்கின்றன. ஆனால் நடந்துகொண்டிருக்கும் விவாதத்தின் கட்டமைவு பற்றிய சில கேள்விகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. 
ஏன் அன்னாவை எதிர்க்கும் அருந்ததிராயைக் குறி வைக்கிறார்கள் ஆனால் சோ - வை விட்டு விடுகிறார்கள்?

  • ஆதரவாளர்கள்    


அன்னா ஆதரவாளர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் [இன்னும் நுணுக்கமாகப் போனால் இன்னும் நிறைய என்றுதான் நான் கருதுகிறேன்]. 

முதல் வகையில் குரல் கொடுப்பவர்கள் அன்னாவோடு ஒட்டி நின்று ஊழல் ஒழிய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள். அதனால் அன்னா என்ன சொன்னாலும் சரி என்று சொல்லுகிறவர்கள். அதனாலேயே அவர் முற்றிலுமாகக் காந்தியவாதி என்பதை என்பிப்பதற்காகவே முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், பின்பற்றுபவர்கள். இதில் சிலர் அறிவு ஜீவிகள். பெரும்பான்மையானவர்கள் சாதாரண மக்கள், மற்றும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற இளைஞர்கள்.
 
ஆதரவாளர்களில் மற்றொரு வகை ஊழலுக்கு எதிர்ப்பு என்பது சரியானதுதான்; அன்னாவைப் பின்பற்றுவது அவசியம்தான் என்பதோடு, அதிலும் உள்ள சிக்கல்கள் களையப்படவேண்டும் என்று நினைப்பவர்கள். அது மட்டுமல்லாமல் ஊழல் என்பது மட்டுமே இந்தியாவின் முதன்மையான பிரச்சனை அல்ல; மாறாக அதுவும் ஒரு பிரச்சனை என்று நினைப்பவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் வலைப்பூக்களில் எழுதுபவர்கள் என்றே நான் கருதுகிறேன். பிரச்சனை என்னவென்றால் தள்ளி நின்று அண்ணாவை ஆதரிக்கும் இந்த வகை ஆதரவாளர்களையும் அன்னா எதிர்ப்பாளர்களாகவே முதல் வகை ஆதரவாளர்கள் கருதுவதுதான். 

  • எதிர்ப்பாளர்கள் 

ஏன் இந்தச் சிக்கல்? இதைப் புரிந்து கொள்ள அன்னா எதிர்ப்பாளர்களையும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். கொள்கை பிடிக்காததால் அன்னாவை எதிர்ப்பவர்கள் முதல் வகை. அவர் காங்கிரசின் கைக்கூலியோ என்பதனால் பிடிக்காமல் போனவர்கள் இரண்டாம் வகை. 

முதல் வகையில், அருந்ததிராய், அருணா ராய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவது வகை வெறுப்பாளர்கள் வரிசையில் ‘சோ’ போன்றவரைச் சொல்லலாம். குஜராத் முதல்வரைப் பற்றித் தவறாகச் சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை இவருக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றே கருதுகிறேன். 

இதில் முதல் வகை எதிர்ப்பாளர்கள் அவர்களுடைய கருத்துக்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவர்கள் - மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். அதேபோல இரண்டாம் வகை வெறுப்பாளர்கள் இன்னும் அதிகமாகவே கவனிக்கப் பட வேண்டியவர்கள். அண்ணாவோடு ஒட்டி நிற்கும் ஆதரவாளர்கள் தள்ளி நிற்பவர்களையும் எதிர்த்து நிற்பவர்களை மட்டுமே கவனித்து இந்த இரண்டாம் வகை வெறுப்பாளர்களை /எதிர்ப்பாளர்களைப் பற்றி அதிக அக்கறையோ அல்லது அவர்களை பெரிய எதிரியாகப் பார்ப்பதை விடுத்து அருந்ததிராயை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். இதில் எந்த வித சிக்கலுமின்றி ‘சோ’ வகையறாக்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் [அல்லது தப்பிக்க ஆதரவாளர் அறிவு ஜீவிகள் உதவுகிறார்களா?]. 

அருந்ததி ராய் கேட்கிற கேள்விகள் நியாயமானவை என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ள மனமின்றி அன்னாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள். இரண்டாவது சுதந்திரப் போர் என்பது இந்தியாவிற்குள் நடக்கும் முதல் சுதந்திரப் போர்தான் – அது அரசியல் வாதிகளுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா அல்லது சாதிய / இந்துத்துவத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமா என்பதிலும், அல்லது பழங்குடியினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட வேண்டுமா என்கிற கேள்விக்கும் பதில் இல்லாமல் இவர்களை அன்னாவின் மீதும் காந்தியத்தின் மீதும் அவதூறு செய்வதாக அவதூறு செய்கிறார்கள் முதல் வகை ஆதரவாளர்கள். இந்தச் சிக்கலில் அன்னா ஆதரவாளர்களில் இரண்டாவது வகையாளர்கள் அருந்ததிராயின் கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளையும் சிக்கல்களையும் முன்னிறுத்துவதனால், அன்னா ஆதரவாளர்களில் இரண்டாம் வகையும் அன்னாவின் எதிரிகளாகக் கட்டமைக்கப் படுகிறார்கள்.

இதில்தான் அன்னா ஆதரவாள அறிவுஜீவிகள், இரண்டாம்வகை ஆதரவாளர்கள் மீதும், முதல் வகை எதிர்ப்பாளர்கள் மீதும் வெறியோடு இருக்கும் சூழலில் ‘சோ’ போன்றவர்கள் எளிதாகத் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். 

  • வேண்டுகோள் 


எனவே அன்னாவை கொள்கையளவில் எதிர்க்கும் அருந்ததிராய் போன்றோரை கொடூரமானவராக சித்தரித்து, இந்துத்துவக் கொள்கை வெறியில் எதிர்க்கும் ‘சோ’ வை எந்த விதச் சிக்கலுமின்றி தப்பிக்க உதவும் முதல் வகை ஆதரவாளர்களே கொஞ்சம் விழித்தெழுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். 

இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் இந்த அறிவு ஜீவிகள் ஏற்கனவே விழித்து எழுந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. முதல்வகை அன்னா ஆதரவாளர்களும், இந்தியா இந்து என்கிற போர்வையில் மீண்டும் சாதியக் கட்டுமான மேலாதிக்கத்தை விதைக்க இந்த ஊழல் போராட்டத்தை ஆதரித்து சோ எதிர்ப்பின் வழியாய்ச் சாதிக்க நினைப்பதை இவர்கள் ஆதரவின் வழியாய்ச் சாதிக்க நினைக்கிறார்களோ என்றும் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இருந்தாலும், இதில் சாதாரண மக்கள், பெருமளவில் எழுச்சியோடு கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த முகாந்திரம் களைந்து போகிறது. ஆனால் அறிவு ஜீவிகளின் அந்தக் கட்டமைவில்தான் இந்தச் சந்தேகம் வலுக்கிறது.


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்