21.9.13

இந்தியர்கள் கோமாளிகள் ஆக்கப் படுகிறார்களா? - (தினமணி தலையங்கம்)

அணு உலை விஷயத்தைப் பற்றியும் அதில் உள்ள சிக்கல்களை பற்றி எழுதும் போதெல்லாம் பொது மக்கள் கோபப்படுவதைத்தான் பார்க்கிறேன்.  அணு உலையே வேண்டாம் என்பதுதான் நமது நிலையாக இருந்தாலும், அரசு அதற்கு செவிமடுக்கும் சூழ்நிலையில் இல்லை. இந்த அரசு அவசரப் பட்டு எடுக்கும் எந்த முடிவும் நாட்டை அதல பாதாளத்திற்குத்தான் தள்ளும். நாட்டு மக்களின் பாதுகாப்பை பணயம் வைத்துத்தான் நமது வளர்ச்சி இருக்க வேண்டுமா என்பதைக் கேட்க வேண்டியிருக்கிறது. 

ஆனானப் பட்ட ஜப்பானே எல்லா அணு உலைகளையும் மூடியிருக்கிறது. நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

விபத்தினால் ஏற்படும் எந்த நிலையையும் பணம் சரி செய்துவிடாதுதான். அதற்காக விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் இருந்து அணுஉலை வழங்கும் நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தொழில் நுட்பக் கோளாறோ அல்லது சேவைக் குறைபாட்டினாலே விபத்து ஏற்பட்டால் அதை வழங்கிய நிறுவனத்தின் மீதான பொறுப்பை இந்திய அரசு குறைக்கப் பார்க்கிறது. 

சாதரணமாக வாங்கும் பொருட்களுக்கே கியாரண்டி எல்லாம் இருக்கும் போது அணு உலைகள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்... இப்படியே போனால் ஐ.எஸ்.ஐ. க்கெல்லாம் வேலையே இருக்காது. கியரான்டிக்கும் வேலை இருக்காது - சைனாப் பொருட்களைப் போல. ஆனால் உடைத்தால் தூக்கிப் போட இது ஒன்றும் கொசு அடிக்கும் பேட் அல்ல.
விபத்தினால் உயிரிழக்கப் போகிறவர்கள் கையெழுத்து இடப் போகிறவர்களும் அல்ல.
நம்மை பணயம் வைத்து நிறுவனங்களை - அமெரிக்க நிறுவனங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன? 

அமேரிக்கா சிரியா மீது கட்டப் பஞ்சாயத்து பண்ணுகிறது? தனது நாட்டு மக்கள் மீதே சிரியா அதிபர் காஸ் பயன்படுத்தினார் என்று. இப்ப இந்தியப் பிரதமரைப் பயன்படுத்தி இந்திய மக்களின் பாதுகாப்பை உசாதீனப் படுத்த வைக்கும் இந்த வேலைக்கு யார் கட்டப் பஞ்சாயத்து பண்ணுவது? இந்தியப் பிரதமர் மீதோ, இதைச் செய்யத் தூண்டும் அமேரிக்கா மீது யார் படையெடுப்பது?

இனி தினமணி தலையங்கம்...
 ===============================================================
போபால் விஷவாயு விபத்தில், யூனியன் கார்பைடு நிறுவனம் இந்திய மக்களை ஏமாற்றியதைப் போன்ற இழிநிலை இனியும் ஏற்படலாகாது என்பதற்காக, மிகப்பெரும் எதிர்ப்புகள் போராட்டங்களுக்குப் பிறகு, அணுஉலை விபத்திற்கு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருந்தால், அணுஉலைகளை வழங்கியவர்கள் பொறுப்பேற்கவும், இழப்பீடு வழங்கவும் செய்யும் சட்ட விதிமுறைகள் ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இப்போது, அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அணுஉலையை வழங்கிய நிறுவனம் பொறுப்பேற்று, இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையை இந்திய அரசு தளர்த்தவிருக்கிறது என்கின்ற செய்தி "கதிர்வீச்சுக் கசிவாக' வந்துகொண்டிருக்கிறது.
அணுஉலை விபத்தில் குடிமை கடப்பாடு சட்டம், பிரிவு 17-ல், விபத்துக்குக் காரணம் அணுஉலை, அல்லது தொழில்நுட்பம், அல்லது சேவைக் குறைபாடு என உறுதிப்படும்போது, அதை வழங்கிய நிறுவனமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது.
தற்போது அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆலோசனை கூறியிருப்பதைப் போல, "இந்த பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்துவதோ அல்லது வலியுறுத்தாமல் விட்டுவிடுவதோ அந்த அணுஉலையை நடத்தும் நிறுவனத்தின் விருப்பத்தை சார்ந்தது' என்று மாற்றுவதன் மூலம், அணுஉலை வழங்குபவரைப் பொறுப்பேற்பிலிருந்து விடுவித்துவிட வழியேற்படுகிறது.
இந்தியாவில் அத்தனை அணுஉலைகளையும் தற்போது இயக்குவது இந்திய அணுமின் கழகம் (என்பிசிஐஎல்). இது இந்திய அரசு நிறுவனம். ஆக, பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்தாமல் தவிர்த்தால், முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய கடப்பாடு இயல்பாக இந்திய அணுமின் கழகத்தையே சேரும்.
அடுத்த கட்டமாக, அணுமின் நிலையங்களைத் தனியார்மயமாக்கும்போது, ஒப்பந்தத்தில் யாரைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பது அந்த தனியாரின் விருப்பம். ஆகவேதான் இந்த விதித்தளர்வு என்று இந்திய அரசு எதிர்வாதம் வைக்கக்கூடும்.
அனல்மின் நிலையங்களைப் போல, அணுமின் நிலையங்களையும் தனியார் நடத்துவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். ஆனால், அணுஉலை விபத்தில் குடிமைக் கடப்பாடு சட்டத்தில், இழப்பீடு தொகை அதிகபட்சம் எவ்வளவு? அரசு சார்ந்த நிறுவனம் என்றால் 300 மில்லியன் டாலர், அதாவது, இன்றைய கணக்கில் 1850 கோடி ரூபாய். அதுவே, தனியார் நிறுவனம் என்றால் ரூ.1500 கோடி மட்டுமே! எப்படி இருக்கிறது?
இந்திய அரசுக்கு அதிக தொகையும், தனியாருக்கு குறைந்த தொகையும் இழப்பீடு என்பதே ஒரு ஏமாற்று வேலை. இப்போதைக்கு அரசுதான் அணுஉலைகளை அமைக்கப் போகிறது என்று கூறி மக்களை ஏமாற்றும் வித்தை. இது தவறு என சுட்டிக்காட்டினால், "இந்தத் தொகை அந்தந்த நேரத்துக்கு மாறுதலுக்கு உட்பட்டது' என்பதையே இந்திய அரசு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.
இழப்பீடு வழங்குவதில் அதிகபட்ச அளவு என்ற கட்டுப்பாடு கூடாது என்றும், இழப்பின் தன்மையை கணக்கிட்டு முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கூறிய போதிலும் அதனை அரசு பொருட்படுத்தத் தயாராக இல்லை.
தனியார் நிறுவனங்கள் அணுமின்நிலையங்களை நடத்தும்போது, இழப்பீடு தொகைக்காக காப்பீடு செய்து கொள்வதே வழக்கம். இந்திய அரசு சொல்வதைப் போல, அவர்கள் காப்பீடு செய்து கொண்டால், ரூ.1500 கோடிக்கு மட்டுமே காப்பீடு செய்வார்கள். விபத்து மிகப்பெரியதாக இருப்பின், மீதி செலவினத்தை நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசுதான் ஏற்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுக்கு அணுஉலைகள் வழங்கப்போகும் அமெரிக்க நிறுவனங்கள் இரண்டு: வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ. இதில், புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு அணுஉலைகள் வழங்கிய ஜிஈ நிறுவனம் அடைந்த லாபம் 5 பில்லியன் டாலர். 2011, மார்ச் 11 ல் அணுஉலைகள் சேதமடைந்தன. இதற்கு ஜிஈ நிறுவனம் பொறுப்பேற்க சட்ட விதிகள் இல்லை. அப்படியே இருந்தாலும், இயற்கை பேரிடருக்கு (இந்திய சட்டத்திலும்கூட) அணுஉலை வழங்கியவர் பொறுப்பாக மாட்டார். இப்போது இந்த அணுமின் நிலையத்தை நடத்திய "டெப்கோ' காப்பீட்டுத்தொகையைவிட இழப்பீடு அதிகமாக இருப்பதால் நட்டத்தில் தத்தளிக்கிறது.
பட்டுத் திருந்துபவன் ஏமாளி. பார்த்துத் திருந்துபவன் அறிவாளி. நாம் அறிவாளியாக இல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களாலேயே கோமாளி ஆக்கப்படுகிறோமே, அதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை!
(ஆசிரியர் தினமணி)
==============================================================================================

17.9.13

மதச்சார்பின்மை- அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மதச்சார்பின்மை என்ன என்பதை ராணுவ வீரர்களிடம்தான் அனைத்து அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திரு நரேந்திர மோடி அவர்கள் நேற்று உரையாற்றினார்...

நன்றி தினமணி 

இதற்கு முந்தய பதிவில் இடிக்கத் தூண்டியவரை விட எரிக்கத் தூண்டியவர்தான் அதிக செல்வாக்கோடு இருக்கின்றார் என்று எழுதியதற்கு நண்பர் ஒருவர் பின்வருமாறு பின்னுரை எழுதியிருந்தார்...
கோத்ரா ரயில் எரிப்பில் ஈடுபட்டது முஸ்லிம்கள்.கலவரத்தை ஆரம்பித்தது முஸ்லிம்கள்.அதன் பலனை அவர்கள் அனுபவித்தனர்."
நண்பர் சொன்ன கருத்தைத்தான் மோடியின் வரவை விரும்புகிற அனைவரும் சொல்லுகிறார்கள். ஆரம்பித்தது இஸ்லாமியர்கள்... எனவே அதன் பலன் மீண்டும் அவர்களை மற்றவர்கள் சேர்ந்து கொல்லுவது. அதனால்தான் அவர் வலுவான தலைமை என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

குஜராத் முதல்வர் மீது இருக்கிற குற்றச்சாட்டே, தொடர்ந்த அல்லது தொடர விட்ட கலவரங்களை அடக்க மறந்தவர் அல்லது மறுத்தவர் என்பதுதான்... அரசு அதிகாரத்தில் இருக்கிறவர்கள் கலவரத்தை வளர்ப்பது என்பது இந்திய சட்டத்தின் மீதும் நீதி மன்றத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதை நாம் மறந்து விட முடியாது என்பதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். மக்கள்தான் சட்டத்தை மதிக்கவில்லை என்றாலும் முதல்வராவது மதிக்க வேண்டுமல்லவா? [யார் மதிக்கிறா அப்படின்னு பதில் கேள்வி கேட்டா அப்ப திரு மோடி அப்படித்தானான்னு பதில் கேள்வி கேக்க வேண்டியதுதான்].

கலவரம் விளைவிக்கிறவர்கள் குற்றவாளிகள். அவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள். அது யாராக இருந்தாலும்.... அதைக் காரணம் காட்டி நம் விருப்பப் படி செயல்பட இது ஒன்றும் தமிழ் திரைப்படம் இல்லையல்லவா​?

காங்கிரஸ் அரசுக்கு மாற்றான ஒரு அரசு வர வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். அது பா.ஜ.க வாக இருக்கலாம்.  அதற்காக மதத்தை அரசியலில் கலப்பது தவறு. மீண்டும் மீண்டும் மதத்தை மட்டுமே பா.ஜ.க. முன்னிறுத்துவது தவறு என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுவது நல்லது. காங்கிரசை எல்லாரும்தான் எதிர்க்கின்றனர். ஏதோ காங்கிரஸ் ஆட்சி மைனாரிட்டி மக்களுக்கு மட்டுமே நல்லது செய்வது போலவும், மைனாரிட்டி மக்களுக்கு மட்டுமான ஆட்சி என்பது போலவும், இந்து மக்களை வாழ விடாது போலவும் பேசுவது அல்லது அப்படி ஒரு பிரம்மையை உருவாக்கி அதற்காக இந்தியக் குடிமக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்துத்தான் பா.ஜ. க. வை வளர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

உண்மை என்னவெனில் காங்கிரஸ் அரசு எந்த ஒரு இந்தியனையும் வாழ விடாது... அதற்கு பிரித்துப் பார்க்கத் தெரியாது. எல்லாரையும் வெறுக்கும். பணக்காரர்களை மட்டுமே மதிக்கும். உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே. விவசாயிகளின் வெறுப்பு, சொந்த நாட்டு மீனவர்களையே காக்க துப்பில்லாத அரசு, மக்கள் கூடி வாழும் இடங்களில் ஒட்டு மொத்தமான அணு உலைகள், அந்நிய முதலீடு என்ற பெயரில் அனைத்தையும் வெளியாருக்குத் தாரைவார்க்கும் பொருளாதாரக் கொள்கை, ஊழல், பெட்ரோல் விலை உயர்வைக் கட்டுப் படுத்தாத தாரள மாயம், பெரு முதலாளிகளின் கைக் கூலிகளாக இருக்கும் அரசு, என்று அதன் மீது குற்றம் சாட்டுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன... 

இவைகளுக்கான மாற்றாக புதிய கொள்கைகள், திட்டங்கள் இவைகளை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். சும்மா அதை விட்டுவிட்டு இந்த அரசு இஸ்லாமியர்களைப் பாதுகாக்கிறது இந்துக்களை எதிர்க்கிறது என்று மக்களை எமோஷனல் பெயரில் வன்முறையையும், வெறுப்பையும் விதைப்பது - பா. ஜ.க விடம் மாற்றுக் கொள்கைகள் ஒன்றும் இல்லை என்பதைத் தான் காட்டும். அது இதை ஒரு போதும் காங்கிரசிடமிருந்து வேறுபட்ட கட்சியாக காண்பிக்காது. 

கொள்கைகள் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. தெளிவு படுத்த வேண்டியவைகள் கொள்கைகளே தவிர பிளவுகள் அல்ல... 

மதச் சார்பின்மையை நாம் ராணுவ வீரர்களிடம் கற்றுக் கொள்ளலாம். அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற திரு மோடியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அவரும் அரசியல்வாதி என்பதனால் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கலாம் - 
நீங்க எப்ப சார் கத்துக்கப் போறீங்க?

16.9.13

பாராட்டு, பானம், பாலியல் குற்றங்கள் -

பாராட்டு 
செய்தித் தாளைப் புரட்டினால் மோடி சகட்டு மேனிக்கு எல்லாரையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் என்கிற செய்தியை பத்திரிக்கைகள் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன:  பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் வாஜ்பேய் மற்றும் அத்வானிக்குப் புகழாரம். ராணுவ அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு. இந்திய விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு. இதைப் பார்த்த உடனே தங்கள் பங்குக்கு சளைத்தவர்கள் இல்லை என மோடியைப் பலர் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். மோடி பன்முகத்தன்மை கொண்டவர் என வெங்கையா நாயுடு புகழாரம். ஒரு முகத்தை பார்க்கவே பல பேருக்கு பயமா இருக்கு இதுல பன்முகமா... மோடிய அறிவித்ததில் ஒரே வருத்தம் திரு அத்வானிக்குத்தான்... ஆனாலும் அவர் எப்படியாவது வழிக்கு வந்து விடுவார். அந்த நம்பிக்கையை திரு ஜஸ்வந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
என்ன செய்வது இடிக்கத் தூண்டியவரை விட எரிக்கத் தூண்டியவர் மேலானவர் ஆகிவிட்டார் என்கிற வருத்தமோ என்னவோ?

பானம்

  • லண்டனில் பிறந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஐ.பி. எல். ஊழல் பற்றி எதோ வர தனது அமைச்சர் பதவியை தாரை வார்க்க வேண்டியிருந்தது. ஊழல் குற்றம் சாட்டப் பட்ட எந்த அமைச்சர் தண்டிக்கப் பட்டார்... வழக்கம் போல மீண்டும் பதவி. சும்மா இல்லாமல் விவேகானத்தர் சிலை திறக்கப் போன இடத்தில் விவேகானந்தருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது  என்று உளறியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.  கலகம் விளைவிப்பவர்கள் எல்லாம் பதிவியில் இருக்கும் போது மது அருந்தியவர் மகானாக இருக்கக் கூடாதா என்ன​? 


  • பார்களைத் தமிழகம் முழுதும் தொடங்கி அதைப் பராமரித்து அதனால் வரும் வருமானத்தை வைத்து நமது நாடு நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது அம்மாவை மிஞ்ச அரசியலில் யாரும் இல்லை. நேற்றுக் கூட பத்திரிக்கையாளர் சோ அவர்கள் அம்மாவைப் பார்த்தார்களாம். அவர் வெறும் பத்திரிக்கையாளரா என்ன​? அது கிடக்கட்டும். மோடி அவர்கள் மதுரையில் கூட நிற்கப் போவதாகக் கேள்வி. அது என்னமோ தெரியலை எரித்தலுக்கும் திரு மோடி அவர்களுக்கும் நெருங்கிய சொந்தம் போல - கண்ணகி எரித்த மதுரையில் நிற்கப் போகிறாரே அதனால் சொன்னேன். இதற்கும் கோத்ரா எரிப்புக்கும் ஒரு தொடர்பும் இல்லை.  அது என்னமோ தெரியலை தமிழகத்தை கலவர பூமியாக ஆக்குவதில் எல்லாருக்கும் என்ன சந்தோஷமோ தெரியலை...


  • சொல்ல வந்த செய்தியை விட்டு எங்கேயோ போயாச்சே - புதிதாக அம்மா குடி நீர்... அம்மா உணவகம். குறைந்த விலையில் நிறைந்த தரம். பஸ் ஸ்டாண்டுல குறைந்த விலை போல பார்ஸ்டாண்டிலும் இது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பாலியல் குற்றங்கள்
பெண் பாலியல் வழக்கில் நான்கு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்த பிறகு பாலியல் பலாத்காரம் அதிகரித்திருக்கிறது. குற்றவாளிகளுக்காக வாதாடிய வக்கீல் மரணதண்டனை கொடுத்தால் குற்றம் குறைந்து விடும் என்றால் நானே குற்றவாளிகளைத் தூக்கிலிட எழுதிக் கொடுப்பேன் என்று சவால் விட்டாராம். அதுமட்டுமல்ல பலாத்காரம் செய்யப் பட்ட பெண்மீது அவள் இஷ்டத்துக்கு ஊரைச் சுற்றிய பெண். அப்படிப் பட்ட பெண் எனக்கு இருந்திருந்தால் பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தியிருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நல்ல வழக்கறிஞர். இப்படிப் பட்டவர்கள் இருந்தால் நீதிமன்றம் சிறந்து விளங்கும்.
அவர் வாய் வைத்த நேரமோ என்னமோ...
சிதம்பரத்தில், ருவாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலாத்காரம் செய்ய, அப்பெண் மருத்துவ மனையிலும் இவர் தமிழக சிறையிலும் இருக்கின்றார்.
ஓடும் பஸ்ஸில் நடந்தது போல ஓடும் ரயிலில் ஏசி கோச்சில் இருந்த ஒரு டாக்டரை பலாத்காரம் செய்ய முற்பட்ட ஒரு சி.பி.ஐ வீரரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதாவது பரவாயில்லை.  சோழவரத்தில் ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று ஒரு கும்பல் வன்முறை செய்திருக்கிறது
இது போன்ற செய்திகளை இன்னும் அதிகமாகவே பார்க்க முடியும்...
என்னதான் தண்டனைகள் அதிகரித்தாலும் குற்றங்களும் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் காரணம் வேறு எங்கோ இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்காது. தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து அரசியல்வாதிகளை விடுவித்த அரசாங்கம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
தமிழக அரசாங்கம் இந்த நிதி ஆண்டில் பத்து கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்திருக்கிறது - எதுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதற்கான தொகையை 35 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்திக் கொடுப்பதற்காக.... அம்மா உணவகத்தில அவங்க சாப்பிட மாட்டாங்களா என்ன? சாதாரண மக்களை விட அவங்க சாப்பாட்டுக்கு அதிக பணம்... பேஷ் பேஷ்...


சசி தரூர் அவர்களுக்கும், அனைத்து மலையாளர்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள். அதனால் இன்று சென்னை, கோவை, உதகமண்டலம் மற்றும் எல்லா இடங்களிலும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை... வாழ்க தமிழ்!


14.9.13

மரணம் - பெட்ரோல் - மோடி - அப்பு மண்டி ஆவணி 29


  • டெல்லி  வன்கொடுமை வழக்கில் நான்கு நபர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த நேரத்தில் தண்டனை பற்றி ஏதாவது பேசினால் நான் ஆணாதிக்க வாதியாக சித்தரிக்கப் பட வாய்ப்பு உள்ள காரணத்தினால் அதைத் தவிர்த்து விடுவதே நல்லது. இந்த மரண தண்டனை பெண்களைக் கொடுமைப்படுத்த நினைக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய பாடமாக இருக்கும். 
பழங்குடி மக்கள் மீதான் பாலியல் வன்முறைகள் - 
மற்றும் காடுகளில் தேடல் வேட்டையில் ஈடுபட்ட அரசு காவலர்கள் பெண்களை வன்கொடுமைகள் செய்ததற்கான 
பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.
மனிதாபிமானம் உள்ள அனைவரும் 
இதையும் கவனிக்க வேண்டியது அவசியம். 
  • கலைஞருக்கு கரண்ட்ல கண்டம் - காங்கிரசுக்கு கண்டதெல்லாம் கண்டம். ஊழல் எதிர்ப்பாளர்கள், தமிழ் உணர்வாளர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் - சிறு வியாபாரிகள் - பெட்ரோல் வண்டி பயன்படுத்தும் அனைவரும் என, காங்கிரசுக்கு எதிரானவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காங்கிரசின் ஆட்சி நிச்சயமாய்க் கவிழும்... இதற்கென்று ஆருடம் தெரிய வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.  நேற்று நள்ளிரவில் இருந்து மீண்டும் பெட்ரோல் விலை ஏறியிருக்கிறது. ஏறக்குறைய எண்பது  ரூபாயைத் தொட்டு விட்டது. ஆனால் முப்பது ரூபாய் ஒரு நாள் செலவழித்தால் அவர்கள் ஏழைகள் இல்லை என்ற தங்களது கண்டு பிடிப்பை நிலை நிறுத்தும் வண்ணம் எல்லாரையும் பணக்காரர்களாய் ஆக்குவது ஒன்றே தனது குறிக்கோள் என்று காங்கிரஸ் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
தொன்னூறுகளில் தொடங்கிய தாரள மயமாக்கள் கொள்கைகளின் விளைவைத் தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்....  
தொடங்கி வைத்த பெருமை 
அமைதிப் பேரரசர் மன்மோகன் அவர்களையே சாரும்... 
என்னதான் நடந்தாலும் 
எதுவுமே நடக்காதது போல அவர்கள் இருப்பதுதான் அவர்களின் ப்ளஸ்... 
இவ்வளவு நடந்தும் 
ஒன்றும் நடக்காதது போல இருப்பதுதான் நமது ப்ளஸ்..
  • மோடி பா. ஜ. க... வின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கிறார். அத்வானி மன வருத்தத்தில் இருக்கிறார். நிச்சயமாய் இதை வைத்து பா.ஜ. க பிளவு படாது. மோடி நிச்சயமாய் ஒரு ஒளிரும் இந்தியாவை முன்னிறுத்தப் போகிறார்... "மாற்றம் ஒன்றே நமது இலக்கு" என்று இந்துயாவை முன்னிருத்துவார். கமல் ரசிகர்கள் நாங்கள் பா. ஜ.க. ஆதரவாளர்கள். எனவே திருச்சி வரும் மோடியை சந்தித்து ஜெயாவுடன் கூட்டணி கூடாது என்று சொல்ல இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். (விஷவரூபம் படத்தை பலர் எதிர்க்க இதுவும் ஒரு காரணம் போல). ஆனால், மோடியோ தமிழக முதல்வரோ இதற்கெல்லாம் சளைத்தவர்கள் அல்ல... நிச்சயமாய் பா.ஜ.க அ. தி.மு.க  கூட்டணி நிச்சயம். 
மோடி தனது கறைகளை எல்லாம் மறைக்காமலே 
பிரதம வேட்பாளர் அறிவிப்பு வெளி வந்திருக்கிறது... 
இனிமேல் எந்தக் கறையையும் தாங்கும் ஆற்றலையும் 
அவர் நிச்சயம் பெறுவார்.. 
கறை நல்லது என்கிற வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ 
பிரதம வேட்பாளர் அவர்களுக்கு நிச்சயம் பொருந்தும். 
மோடி வெற்றி பெற்றால் அவரை வெற்றி பெறச் செய்த பெருமை எல்லாம் அ.தி-மு.க. வை அல்ல அது காங்கிரசையே சாரும்.
தாராளமாய் காங்கிரஸ்காரர்கள் 
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் என்னைச் சேரும் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம். 
காங்கிரசுக்கு அ.தி.மு.க கூட்டணி கிடைக்காவிட்டாலும் 
நிச்சயமாய் எம்.ஜி.ஆர். பாட்டைப் பாடுகிற புண்ணியமாவது கிடைக்கும். 
கரண்டு கண்டமும் பெட்ரோல் கண்டமும் ஒன்னாய்ச் சேர்ந்திருப்பதால் 
காந்தி வந்தால் கூட காங்கிரசைக் காப்பாற்ற முடியாது.


1.9.13

என்ன ஆச்சு? – (நானும் பிரதமரும்) - நடுவுல கொஞ்சம் ...

என்ன ஆச்சு? டிரெயின விட்டு இறங்குனேன்... வேகமா நடந்து ஸ்டேஷனின் வாசலுக்கு வந்தேன்.. எதுத்தாப்ல இருந்த படகைப் பார்த்துட்டே படில இறங்குனேன்... ஓ மூணாவது படில செருப்பு வழக்கி விட்டு தலை கீழா விழுந்து படில உருண்டேனா... அப்ப இங்க அடிபட்டிருக்கும்... அங்கதான் ...-

- என்று நான் கீழே விழுந்த பிறகு புலம்ப ஆரம்பித்திருந்தால் நான் கீழே விழுந்ததை வேடிக்கை பார்த்த யாருக்கும் ஒன்றும் புரிந்திருக்காது... ஏன்னா அவங்க யாருக்கும் தமிழ் தெரியாது. மொழி தெரியாத நாட்டுல விழுந்தா இதுதான் சிக்கல்... புலம்பக் கூட முடியாது. யாரு செஞ்ச புண்ணியமோ தலைல அடிபடாம இருந்ததால புலம்பா தப்பிச்சேன்  (ஆனா பாவம் நீங்க மாட்டிக்கிட்டிங்க – என்ன செய்யுறது?).
நானும் வருஷத்துக்கு ஒருமுறை விழுகிறதை வழக்கமா வச்சிக்கிட்டு இருக்கேன். போன வருஷம் ஜூன் மாதம் இப்படித்தான் கி. க. சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டு வெளியே வரும்போது படி முடிஞ்சிறோச்சுன்னு நினைச்சு காலை வைக்க நெஞ்சு தெறிக்க விழுந்தேன் (கி. க. சாலை அப்படின்ன உடனே உங்கள்ள சில பேர் மது உணவு சாப்பிட்டு வெளியே வரும்போது விழுந்தேன்னு படிக்க வாய்ப்பு உண்டு அதனால ரிப்பீட்டு மதிய உணவு) – ஆக மொத்தம் அன்னைக்கு குப்புற விழுந்தேன்... இப்ப மல்லாக்க...
கமல் சொன்ன மாதிரி அது என்ன மாயமோ தெரியல எனக்கு ஒண்ணுமே ஆகிறதில்லை... ... ....

ஏதோ நான் மட்டும்தான் இப்படி விழுந்து அடி வாங்கி ரொம்ப தெம்பா இருக்கிறதா எனக்கு ஒரு திமிரு வந்த நிமிஷமே நம்ம பிரதமரை நினைச்ச உடனே எல்லாம் மறந்து போச்சு... நானெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆகிப் போச்சு.

அவர் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் முன்னாடி ஒவ்வொரு முறையும் அவரை யார் கவிழ்த்து விழ வச்சாலும், அவரே வழுக்கி விழுந்தாலும்  ஒண்ணுமே ஆக மாட்டேங்குது - வெட்கமே இல்லாமல் நான் விழுவதுமாதிரி  அதை பெருமையா வேற சொல்றமாதிரி அவரும் தலையில இரண்டு கைய வச்சுகிட்டு ... 
“என்ன ஆச்சு? 2 G ஆ  ... ஏலம் விட்டாங்களா... ஆயிரக்கணக்கான கோடிகளை ஏப்பம் விட்டாங்களா... நான்தான் பிரதமாரா நான்தான் பேசணுமா ஓ கே ஓ கே.. அது ஊழல் இல்லை நாட்டுக்கு நட்டம் மட்டும்தான் சொன்னா  ... எதிர் கட்சிக் காரங்க இரண்டு நாள் சத்தம் போடுவாங்க... தூங்கி எந்திரிச்சா அதுக்கப்புறம் சரியாயிரும் ...”

அடுத்த கூட்டத் தொடர் - “என்ன ஆச்சு? நிலக்கரி ஊழலா? பதுக்கிட்டாங்களா. நான்தான் பிரதமாரா நான்தான் பேசணுமா... ஓகே ஓகே... எதிர் கட்சிக் காரங்க இரண்டு நாள் சத்தம் போடுவாங்க அதுக்கப்புறம் சரியாயிரும்.”

என்ன ஆச்சு? பண மதிப்பு சரிஞ்சு போச்சா? ரொம்பக் கேவலமா போச்சா? ஓகே ஓகே.. நான்தான் பிரதமாரா! நான்தான் பேசணுமா? எதிர்கட்சிகாரங்க கூப்பாடு போடுறதுனாலதான் பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வர முடியலைன்னு சொன்னா இரண்டு நாள்ல சரியாயிரும்... ... என்ன ஆச்சு பணவீக்கம் அதிகமா போச்சா??? ஓகே ஓகே  - அப்பத்தான் இறக்குமதி கொறஞ்சு ஏற்றுமதி அதிகமாகுமுன்னு சொன்னா எல்லாம் சரியாயிரும்... 

அடங்கொக்க மக்கா - அவரும் ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் முன்னாடி விழுகிறாரு.. ஆனா என்ன மாயமோ தெரியலை நாலு வருஷத்துக்கும் மேல ஆகிப் போச்சு அவருக்கு மட்டும் ஒண்ணுமே ஆகிறதில்லை...

ஆனா ஒண்ணுங்க - விழுந்தவனுக்குதாங்க வலி தெரியும்... நாங்க கடைசியில இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு... நாங்களும் எவ்வளவு நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...
எது எப்படி ஆனாலும் எத்தனை முறை விழுந்தாலும் அவருக்கு ஒன்னும் ஆகாது... ஏன்னா ரெண்டு நாள் ஆனா நாமதான் எல்லாத்தையும் மறந்து போயிருவோம்...

ஆனா நமக்கு அப்படியா நமக்கு ஏதாவது ஆயிப்போனா என்னையே மொத்தமா மறந்துருவாங்க. அதுனால நான் முடிவு பண்ணிட்டேன். இனி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் ஒன்ற டன் வெயிட் இருக்கும்... அப்பதானே விழாம இருக்க முடியும். ஒருநாளைப் போல எல்லா நாளும் இருக்காதில்லை...